இந்திய கிரிக்கெட் அணியில் 3 வகையான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபதுக்கு20) விராட் கோலி தலைவராக பணியாற்றினார்.
தோனிக்கு பிறகு அவர் 3 வகையான போட்டிகளுக்கும் தலைவராக செயல்பட்டு வந்தார்.
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் துடுப்பாட்ட திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது.
விமர்சனங்கள் காரணமாக இருபதுக்கு20 தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
சமீபத்தில் நடந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு தலைவர் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பாகவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையே ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு இந்திய அணிக்கு புதிய தலைவரை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் சபை வலியுறுத்தி வந்தது.
ஆனால் அவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரும்பியது.
இதற்காக அவருக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் தலைவர் பதவியை விட்டு செல்ல விரும்பவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கால அவகாசத்தை நிராகரித்தார்.
இதைத்தொடர்ந்து 49ஆவது மணி நேரத்தில் ரோகித் சர்மாவை தலைவராக நியமித்து கிரிக்கெட் சபை அதிரடி முடிவை எடுத்தது.
மேலும் தலைவர் பதவியில் விராட் கோலியின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன.
விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இதில் 65இல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, 27 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது மேலும், ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் 2 போட்டிகள் எவ்வித முடிவும் இன்றி கைவிடப்பட்டுள்ளன.