லங்கா பிரீமியர் லீக் பிளே-ஆஃப் சுற்று ; கொழும்பை வெளியேற்றி அடுத்த கட்டத்துக்கு சென்றது தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ்

FG e48pVUAEZ I
FG e48pVUAEZ I

லங்கா பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆஃப் சுற்று முதல் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 7 விக்கெட்டுகளினால் வீழ்த்திய தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ், அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணி கிண்ணத்துக்கான கனவினை கைவிட்டு, தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் வெளியேற்றல் ஆட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

இப் போட்டியில் தம்புள்ளை அணித் தலைவர் தசுன் ஷனக்க உபாதை காரணமாக விளையாடாத நிலையில், விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல அணித் தலைவராக செயற்பட்டார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா – டொம் பென்டன் ஆகியோர் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும் பத்தும் நிஸ்ஸங்க மற்றும் அஞ்சலோ மெத்தியூஸின் பொறுப்பான ஆட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை குவித்தது.

பத்தும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அஞ்சலோ மெத்தியூஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார்.

பின்னர் 120 பந்துகளில் 146 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி புறப்பட்ட தம்புள்ளை ஜெய்ன்ட்ஸின் முதல் விக்கெட் முதல் பந்திலேயே வீழ்த்தப்பட்டது.

நிரோஷன் திக்வெல்ல டக்கவுட்டுடன் வெளியேற, அடுத்து வந்த சந்துன் வீரக்கொடியும் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார்.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக பிலிப் சால்ட் – ஜனித் லியனகே ஜோடி சேர்ந்து நெர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் 8 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்களை பெற்றது தம்புள்ளை.

இந் நிலையில் 8.4 ஆவது ஓவரில் பிலிப் சால்ட் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா சத்ரன் கைகோர்த்த லியனகே அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

இந்த அதிரடியின் உதவியுடன் 18.4 ஆவது ஓவரில் கொழும்பு ஸ்டார்ஸ் நிர்ணயித்த 146 என்ற வெற்றி இலக்கினை 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் அடைந்தது தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ்.

போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியனகே 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார். மறுபக்கம் சமிக கருணாரத்ன 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். 

இதனிடையே துடுப்பாட்டத்தில் லியனகேவுக்கு உறுதுணையாக இருந்த நஜிபுல்லா சத்ரன் 34 ஓட்டங்களை பெற்று 17.2 ஆவது ஓவரில் ஆட்டமிழந்திருந்தார்.

கொழும்பு ஸ்டார்ஸ் இந்த தோல்வியின் மூலம் நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தம்புள்ளை ஜெய்ன்ட் பிளே-ஆஃப் சுற்றின் மூன்றாவது ஆட்டத்துக்கான இடத்தினை உறுதி செய்துள்ளது.

இதேவேளை இன்றிரவு பிளே-ஆஃப் சுற்றில் இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவும் அணியுடன் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் மூன்றாவது பிளே-ஆஃப் சற்று ஆட்டத்தில் மோதும்.