மயங் அகர்வால் – பிரித்வீ ஷாவுக்கு வாய்ப்பு

post image 7bcd741
post image 7bcd741

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், இந்தியா அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க இந்த அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா உபாதைக் காரணமாக விலகியுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ரி-20 போட்டியில், துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, அவர் தசை பிடிப்பினால் அவதிப்பட்டார்.

இன்னமும் தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார்.

ஆகையால் அவருக்கு பதிலாக மற்றொரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மாயங் அகர்வால் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடையிலிருந்து மீண்டுள்ள இளம் வீரர் பிரித்வீ ஷா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவான் ஏற்கனவே உபாதையினால் ஓய்வில் இருக்கின்ற நிலையில் பிரித்வீ ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுலுக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், இளம் வீரரான சுப்மான் கில் இப்போட்டியின் ஊடாக டெஸ்ட் அறிமுகத்தை பெறுகிறார்.

அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உபாதை மற்றும் ஓய்வில் இருப்பதால், மாயங் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஞ்சி கிண்ண தொடரின் போது கணுக்கால் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உடற் தகுதியை பொறுத்து அணியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், மாயங் அகர்வால், பிரித்வீ ஷா, சுப்மான கில், செடீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, ரித்திமான் ஷா, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, இசாந் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக நடைபெற்ற ரி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா அணி முழுமையாக கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி, நாளை நடைபெறுகின்றது.

அடுத்ததாக ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.