ஐ.சி.சி. ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

KL rahul 1
KL rahul 1

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது ரி-20 உலகக்கிண்ணத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் ரி-20 தொடர்களை நடத்தி வருகின்றது.

இதில் அண்மையில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெற்று முடிந்தது.

இதில் இந்தியா அணி 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் ரி-20 துடுப்பாட்ட துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…

இந்த பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்தும் 879 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கே.எல். ராகுல் நான்கு இடங்கள் ஏற்றம் கண்டு, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே ரி-20 தரவரிசையில் ராகுலின் சிறந்த தரநிலையாகும்.

நியூஸிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்டு தொடரின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னணியில், அவர் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளார்.

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஆரோன் பின்ஞ், ஒரு இடம் பின்னதள்ளப்பட்டு 810 மதிப்பீட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கொலின் முன்ரோ 785 மதிப்பீட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டாவிட் மாலன் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு, 782 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் கிளென் மேக்ஸ்வெல், ஒரு இடம் பின்னதள்ளப்பட்டு 766 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் லீவிஸ் 702 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஹஸ்ரதுல்லா சஸாய் 692 மதிப்பீட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி, 673 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா, மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 662 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.