தேர்வுக் குழுவின் தலைவராக தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறேன்

demel
demel

தேர்வுக் குழுவின் தலைவராக தற்போது எனக்கு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்வதாகவும் திறமையான வீரர்களுக்கு தேசிய கிரிக்கட் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டீ மெல் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்கள் திறமையை வெளிக்காட்டியிருந்தனர். எதிர்காலத்தில் இலங்கை அணியை தெரிவு செய்வது சவாலாக அமைந்திருக்கும் எனவும் எங்களைப் பொறுத்தமட்டில் இது நல்ல விடயமாகும்.

ஏனெனில் எமக்கு தற்போது சிறந்த அணியொன்று உள்ளது. திறமையான வீரர்கள் தமது வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அணி தற்போது கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதனை உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு நான் சொன்னேன்.

எனவே இதே உத்வேகத்துடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாடினால் அந்தத் தொடரையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு அத்துடன் அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறும் போட்டியில் இந்த திறமைகளை வீரர்கள் மேலும் விருத்தி செய்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

தேர்வுக் குழுவின் தலைவராக தற்போது எனக்கு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொடரிற்கு திறமைமிக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியை ஒருபோதும் நான் இரண்டாம் நிலை அணியாக கருதவில்லை எனவும் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிக் கொண்ட சிரேஷ்ட வீரர்கள் பெரும்பாலானோருக்கு இலங்கை அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க, எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். போட்டியை திட்டமிடும் போது தெரிவுக்குழு தலைவரினதும் பயிற்றுவிப்பாளர்களிதும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சமிம் சில்வா உரையாற்றும் போது, இந்த வெற்றிக்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.