ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் – சங்கக்கரா

sangakkara366 600 27 1469628899
sangakkara366 600 27 1469628899

ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கரா கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் நிறுவனத் தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் அண்மையில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவன தலைவர் காலின் கிராவ்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

அதே சமயம் இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவரும், முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியை ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவன தலைவர் கிரேமி சுமித் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கராவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சங்கக்கார ஒரு செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன். நான் கங்குலியின் தீவிரமான ரசிகர். ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். புத்திசாலித்தனமானவர். கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு.

ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எந்த நிலையிலும் மாறக்கூடாது.

இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன்.

எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன் என்றார்.