சாதனையுடன் தொடரை கைப்பற்றியது அவுஸ்ரேலிய அணி

aus
aus

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் 03 போட்டிகள் கொண்ட T20I தொடரின் 3வது போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பாக குசல் ஜனித் பெரேரா 57 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டொ 20 ஓட்டங்களையும், பானுக ராஜபக்‌ஷ ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார், ரிச்சர்ட்சன், பட் கம்மின்ஸ தலா 02 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 17.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

டேவிட் வோனர் 57 ஓட்டங்களையும், பின்ச் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வோனர் தெரிவு செய்யப்பட்டார்.

பந்துவீச்சில் லசித் மலிங்க, லகிரு குமார, நுவான் பிரதீப் தலா ஒரு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

3வது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் அவுஸ்ரேலிய அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

அவுஸ்ரேலிய மண்ணில் இதுவரை நடைபெற்ற T20I தொடர்களில் இலங்கை அணி தொடரை இழந்தது கிடையாது. அதனை அவுஸ்ரேலிய அணி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த அனுபவமற்ற இலங்கை அணி தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்த போதிலும் அனுபவமிக்க குழாத்தினருடன் சென்ற இலங்கை அணி முற்று முழுதாக தொடரை பறிகொடுத்துள்ளமை இலங்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.