கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் இன்று ஆரம்பம்

720x450 1

கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனைகள்  இன்று (திங்கள்கிழமை)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த மருந்து ஏற்கனவே இரண்டு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஆா்.எம் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாதில் செயற்பட்டுவரும் பாரத் பயோடெக் நிறுவனமானது  கொரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடா்ந்து மனிதா்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவேக்சின் எனப்படும் குறித்த மருந்தை விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 30 தன்னாா்வலா்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவை வெற்றி பெற்றதாக எஸ்ஆா்எம் கல்வி நிறுவனம் தெரிவித்தது. அதைத் தொடா்ந்து  150-க்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அவா்களது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.