பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீடித்து ட்ரம்ப் உத்தரவு!

donald trump pulled out 720x450 1
donald trump pulled out 720x450 1

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் நுழைவு இசைவு (விசா) தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்கு ஹெச்-1பி, ஹெச்-2பி போன்ற நுழைவு இசைவுகள் வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது.

இந்தநிலையில், நுழைவு இசைவு (விசா) தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ட்ரம்ப் நீடித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், முன்னர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தடையுத்தரவை கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், அது நீக்கப்படுமா என்பது குறித்து உறுதியளிக்கவில்லை.

பணி விசாக்களுக்கான தடை நீட்டிப்பு, பெரும்பாலான நாடுகளை சேர்ந்த கணனி துறை பணியாளர்களுக்கு பாதிப்பாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு எதிராக முன்னதாக கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கமாக உள்ள தொழிலக கூட்டமைப்புகள் வழக்கு தொடுத்திருந்தன.

அமெரிக்காவில் சுமார் 6 இலட்சம் பேர் ஹெச்-1பி நுழைவு இசைவு பெற்று பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.