சூடான் முன்னாள் ஜனாதிபதிக்கு 2 வருட சிறை!

4 rt5
4 rt5

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர் ஹஸன் அஹ்மது பஷீருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஜனாதிபதிப் பதவியை வகித்து வந்தவர்தான் உமர் அல் பஷீர் (வயது 72) ஆவார்.

இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். இதற்கிடையில் அங்கு விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியதால் பெரும் அவதிக்குள்ளான மக்கள் ஜனாதிபதியைப் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2018 டிசம்பர் முதல், நாட்டில் அல்-பசீரின் ஆட்சிக்கு எதிராக பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஏப்ரல் 11 அன்று, இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை சூடானிய இராணுவம் அரசுத் தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்தியது.

சூடான் நாட்டில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து 30 ஆண்டு காலமாக நீடித்த அரசு தூக்கியெறியப்பட்டு கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் உமர் அல் பஷீரின் வீட்டில் கடந்த ஏப். 21 திகதி இராணுவ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது ஒமர் அல் பஷிரின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

சுமார் ஒருமாத கால விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓமர் அல் பஷீர் தனது ஜனாதிபதிப் பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான வெளிநாட்டு பணத்தை முறைகேடான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம், ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டே இந்த இரு வருட தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டு சட்டங்களின்படி, 70 வயதை கடந்த குற்றவாளிகளை சிறைகளில் அடைப்பதில்லை என்பதால், தற்போது 72 வயதாகும் ஓமர் அல் பஷீர், தண்டனைக்காலம் முடியும்வரை சீர்திருத்த மையத்தில் அடைக்கப்படுவார் எனவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.