உயிர்களை காக்க 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை கோரும் யுனிசெப்

UNICEF
UNICEF

தெற்காசியாவில் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 இலிருந்து உயிர்களை காக்க உதவுவதற்கு, ஒட்சிசன் மற்றும் பரிசோதனைப் பொருட்களை, மருத்துவ உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளை, தொற்று பரவலை தடுக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் யுனிசெப் (UNICEF )இற்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது.

உலகளாவிய புதிய தொற்றுக்களில் பாதியளவானது சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பிராந்தியத்தில் பதிவாகின்றது. ஒவ்வொரு நொடியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 நோய்மாறிகள் பதிவாகின்றன. பிராந்தியத்தில் உயிரிழப்பு வீதமும் துரிதமாக அதிகரித்து வருகின்றது. கொவிட்-19 காரணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

´கொவிட்-19இன் இந்த புதிய பரவலின் வேகமும், அளவும் உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கும் நாடுகளின் இயலுமையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது´ என தெற்காசியாவுக்கான யுனிசெப்(UNICEF )இன் பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லார்யா-அட்ஜே தெரிவித்தார்.

´வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன, ஒட்சிசனுக்கான மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களுக்கான பற்றாக்குறை உள்ளது, சுகாதார முறைமை உடைந்து நொறுங்கக் கூடிய ஆபத்து உள்ளது´ என அவர் மேலும் தெரிவித்தார். இந்த பெருந்தொற்றின் முதல் அலையின் போது, அத்தியாவசிய சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டமையின் காரணமாக தெற்காசியா முழுவதிலும் சுமார் 228,000 சிறுவர்களும், 110,000 தாய்மாரும் உயிரிழந்தனர். ´முதல் அலையை விட நான்கு மடங்கு பெரிய ஒரு பரவல் அளவை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிறுவர்களுக்கும், தாய்மாருக்குமான முக்கிய சுகாதார பராமரிப்பு சேவைகளை பேணும் அதேவேளை, கொவிட்- 19 இனைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் எம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்´ என லார்யா-அட்ஜே மேலும் கூறினார்.

மே மாதம் 18ஆம் திகதி, கொவிட்-19 பெருந்தொற்று வரலாற்றில் நாளொன்றின் அதிகளவு உயிரிழப்புக்களை (4,529) இந்தியா பதிவு செய்தது. நேபாளத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுகளிலும் நாளாந்த தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புக்களின் அளவு அதிகரித்து வருகின்றது. மாலைதீவுகளின் தலைநகரில் உள்ள வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இதே நிலையை எதிர்கொள்ளக் கூடும். மாலைதீவுகள், பூட்டானைத் தவிர பிராந்தியத்தின் அனைத்து நாடுகளிலும், 10இல் ஒருவருக்கும் குறைவானோரே கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நிதித் தேவைகளில் உள்ளடங்குவன:

• 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – வைத்தியசாலைக்கான ஒட்சிசன் பிறப்பாக்கி ஆலைகள் உள்ளடங்கலாக, கையில் கொண்டு செல்லக் கூடிய ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள்.
• 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆர் ரி-பிசிஆர் -( RT-PCR )மற்றும்ஆர் என் எ பிரித்தெடுத்தல் (RNA extraction )இயந்திரங்கள் உள்ளடங்கலாக மருத்துவ மற்றும் நோய்கண்டறிதல் உபகரணங்கள்
• 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – முன்னணி சுகாதாரணப் பணியாளர்களின் செயற்பாடுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். முகக் கவசங்கள், கையுறைகள், ஆடைகள், தலைக்கவசத்தின் கீழ் அணியும் பகுதி, மற்றும் ஏனைய தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்
• 28 மில்லியன் அமெரிக்க டெலர்கள் – தொற்று பரவலைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு வழங்குவதற்கு கை கழுவும் நிலையங்கள், செனிடைசர், சாதனங்கள், ஆடை சுத்திகரிப்பு இயந்திரங்கள், தூய்மை சாதனங்கள்
• 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – ஊட்டச்சத்து உதவி மற்றும் உள்ளெடுக்கக் கூடியவை உள்ளடங்கலாக சிகிச்சைசார் மற்றும் மருத்துவப் பொருட்கள்.

முக்கியமான சுகாதாரப் பொருட்கள் உயிர்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோயின் எதிர்கால அலைகளுக்கு முன்னால் தெற்காசியா முழுவதும் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை உருவாக்க உதவும். கூடுதலாக, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும் இந்த பொருட்கள் பயன்படுத்தப்படும்: ஒட்சிசன் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவது இப்பகுதியில் குழந்தை பருவ நிமோனியாவை எதிர்த்துப் போராடுவதற்கு நேரடியாக பங்களிக்கும், மேலும் கொவிட்-19 ஐ அடையாளம் காணும் ஆர் ரி-பிசிஆர்(RT-PCR )சோதனை இயந்திரங்களும் காசநோய், எச்.ஐ.வி, எச்.பி.வி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்பவற்றையும் கண்டறிய உதவும்.

´தெற்காசியாவில் இந்த கொடிய கொவிட்-19 பரவலானது, தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய வெற்றிகளை அச்சுறுத்தலுக்கு தள்ளியுள்ளதுடன். குழந்தை மற்றும் தாய்வழி உயிர்வாழ்வில் கடினமாக ஏற்படுத்திய முன்னேற்றத்தைத் திரும்பப் பெறுகிறது´ என லார்யா-அட்ஜே தெரிவித்தார். ´இது நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான உதவியையே நாம் கோருகின்றோம்´ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உயிர்காக்கும் கொவிட்-19 சார்ந்த பொருட்களுக்கு மேலதிகமாக, தெற்காசியாவிற்கான கொவிட்-19 எதிர்கொள்ளலில் உள்ளடங்கும் யுனிசெப்( UNICEF), இன் உதவிகள்:

• தொற்றுநோயைத் தடுக்க தகவல் மற்றும் ஆதாரங்களைக் கொண்ட குடும்பங்களை அடைதல் மற்றும் தடுப்பூசி நம்பிக்கையை உருவாக்குதல்
• பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை அதிகரித்தல்
• மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு பண உதவி
• பொது மற்றும் தனியார் துறைகளில் ஈடுபடுவதன் மூலம் சிறுவர்களை கற்க வைப்பதற்கான முயற்சிகளை ஆதரித்தல் மற்றும்
• தொற்றுநோயால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மனநலம் மற்றும் பாதுகாப்பு ஆதரவை வழங்குதல்.