உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் மின்னலினால் பலியானோர் 48 ஆக உயர்வு

download 1 38
download 1 38

இந்தியாவின் உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில், மின்னல் தாக்கங்களினால் 48 பேர் பலியாகினர்.

உத்தர பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களினால், அதிகமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 37 பேர் பலியானதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் அதிகமான மரணங்கள், பதிவாகியுள்ளன.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

இதேவேளை, இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் 11 பேர் பலியாகினர்.

12ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட அமீர் மாளிகையை பார்வையிடச் சென்றவர்கள், மழைக்கு மத்தியில் கோபுரம் ஒன்றின் மீதேறி செல்பி என்ற தாமி படம் எடுத்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

மின்னல் தாக்கம் ஏற்பட்டபோது, அந்தக் கோபுரத்தில் 27 பேர் இருந்ததாகவும், அச்சமடைந்த சிலர் கோபுரத்தில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதாக மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.