பாகிஸ்தான் பேருந்தில் வெடிப்பு சம்பவம்: 9 சீனர்கள் உட்பட 13 பேர் பலி!

unnamed 2 2
unnamed 2 2

பாகிஸ்தானில் பேருந்தொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சீன பொறியியலாளர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளனர்.

கைபர் பட்டுங்வா மாகாணத்தில் உள்ள டசு நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இன்று காலை பொறியியலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்த பின் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது குறித்த பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 சீன பிரஜைகளும், 4 பாகிஸ்தான் பிரஜைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 28 பேர் சீன பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அத்துடன், இந்த வெடிப்பிற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவினால் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தளங்களில் தொடர்ச்சியாக சீன பிரஜைகள் தாக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என தூதரகம் மேலும் கோரியுள்ளது.

எனினும், குறித்த பேருந்தில் தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.