உத்தவ் தாக்கரேயை விமர்சித்த வாலிபருக்கு மொட்டை அடித்த சிவசேனா

uththav thakre
uththav thakre

உத்தவ் தாக்கரேயை விமர்சித்து முகநூலில் கருத்து கூறிய வாலிபரை சிவசேனாவினர் தாக்கி, மொட்டை அடித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 15ம் திகதி டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பொலிஸார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து கூறியிருந்தார்.

இது குறித்து மும்பை வடலா சாந்திநகரை சேர்ந்த ஹிராமனி திவாரி என்ற வாலிபர் கடந்த 19ம் திகதி முகநூல் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஹிராமனி திவாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக விமா்சித்து கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவருக்கு மிரட்டல்கள் வந்ததை அடுத்து அவர், அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவசேனாவினர் குறித்த இளைஞரை தாக்கி அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர். சிவசேனாவினர் வாலிபரை தாக்கி, மொட்டை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிவசேனாவினரால் தாக்கப்பட்ட இளைஞர் தான் புரிந்த குற்றத்திற்கு சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டுமே தவிர சட்டத்தை கையில் எடுத்து கொண்டது தவறு எனவும் சிவசேனாவினர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டனர். எனினும் சம்பவம் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளனர்.