தலிபான்களின் அச்சுறுத்தல்களால் ஆப்கான் மக்கள் இடம்பெயர்வு!

af tali
af tali

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தரவுகளின் பிரகாரம் கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு துருப்புக்கள் மீள அழைக்கப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில் இருந்து குறைந்தது 244,000 மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். ஆப்கான் அரசுக்கு எதிராக தலிபான் குழு பல தாக்குதல்களைத் தொடங்கியது. இந்த தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்களின் போது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 300 சதவிகிதமாகும்.

மேலும் அறிக்கையின்படி, பெரும்பாலான மக்கள் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகின்றனர். எவ்விதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே இடம்பெயர்கின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மாகாண தலைநகரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் தாக்குதல்களை நடந்து வருவதால்  இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஹெல்மண்ட், கந்தஹார், ஹெராட் மற்றும் படாக்ஷான் மாகாணங்களின் தலைநகரங்களைச் சுற்றி ஆப்கான் அரச படைகளுக்கும்  தலிபான்களுக்கும் இடையே கடும் மோதல்கள் தொடர்கின்றன.

கடந்த ஆண்டு கட்டாரில் நடைபெற்ற இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை முயற்சி சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்திய போதிலும் தற்போது  முழுமையான மோதல்கள் இடம்பெறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்கள் தங்கள் 20 வருட இராணுவப் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தினார். 

இவ்வாறானதொரு நிலையில் கட்டாரில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீரா ஊடகத்திற்கு கூறுகையில், ஆப்கானிஸ்தான் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை என்றும், ஆப்கானிஸ்தானில் மேலும் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அமைதியான தீர்வை நாங்கள் விரும்புகிறோம் என்று தலிபானின் சர்வதேச ஊடக செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் குறிப்பிட்டுள்ளார்.