ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு

download 8
download 8

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச சமூகத்துடன் அமைதியான உறவுகளுக்கு, தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் கானி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தஜிகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் ஆயிரம் அமெரிக்க துருப்பினரை காபூலுக்கு அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அனுமதியளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

காபூலில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பொதுமக்களை, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.