ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்கிறார்!

japan PM
japan PM

ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்ற ஃபுமியோ கிஷிடா ஜப்பானின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகினார். இதனையடுத்து, யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசாங்கம்  கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

இதனையடுத்து, பிரதமர் யோஷிஹிதே சுகா, தனது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளதால் அக்கட்சியின் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்  யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இந்நிலையில், தற்போது சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் 64 வயதான ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஃபுமியோ கிஷிடா ஏற்கனவே 2012 – 2017 ஆம் ஆண்டு வரை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம்  அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.