மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!

thumb 38
thumb 38

மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுவர்களையும், குழந்தைகளையும் கொல்கிற நோயாக மலேரியா இருந்து வருகிறது.

100 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர் மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆர்.ரீ.எஸ்,எஸ்/ஏ,எஸ்01 என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசி, மலேரியாவை தடுக்கிற செயல்திறனைக் கொண்டுள்ளது என்பது 6 ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபணமானது.

கானா, கென்யா, மாலாவி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசி சோதனை ரீதியில் பயன்படுத்தப்பட்டது. தற்போது சகாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது.

இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தருணம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கூறி உள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறும்போது,

“குழந்தைகளுக்காக நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்டது, மலேரியா தடுப்பூசி. இது விஞ்ஞானம், குழந்தைகள் ஆரோக்கியம், மலேரியா கட்டுப்பாடு ஆகியவற்றில் ஒரு முன்னேற்றம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இது காப்பாற்றும்” என தெரிவித்தார். ஆப்பிரிக்காவில் 2019-ம் ஆண்டு 2 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் மலேரியாவால் உயிரிழந்தது மானுட சோகமாக அமைந்தது என்பது நினைவுகூரத்தக்கது.