இந்தோனேசிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!

af pertaminafire 141121
af pertaminafire 141121

ஜாவாவின் மத்திய பகுதியான சிலகாப்பில் அமைந்துள்ள இந்தோனேசிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் சனிக்கிழமை மாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் தீப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், படிப்படியாக அணைக்கப்பட்டு வருவதாகவும் இந்தோனேசிய எரிசக்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) அதிகாலை தெரிவித்துள்ளது.

எரிபொருள் சேமிப்பு பிரிவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.20 மணியளவில் தீப்பரவல் தொடங்கியது.

இதனால் குறித்த நிலையத்தை அண்மித்த 80 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிலாகாப் சுத்திகரிப்பு வளாகத்தில் உள்ள 228 சேமிப்பு தொட்டிகளில் ஒன்றை தீ பாதித்தது, மேலும் தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெர்டமினா உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும் மற்றும் தேசிய எரிபொருள் தேவையில் 34 சதவீதத்தை இது வழங்குகிறது.