ருமேனியா ஆயுத தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு : 4 பேர் பலி

X Press Pearl fire expolosion 750x375 1
X Press Pearl fire expolosion 750x375 1

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த ஆலை, ருமேனியா இராணுவத்துக்கும் நேட்டோ படைகளுக்கும் இராணுவ தளபாடங்களை உற்பத்தி செய்து, விநியோகித்து வருகிறது.

100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இந்தத் தொழிற்சாலையில் திடீரென கண்ணி வெடி ஒன்று வெடித்து சிதறியது.

இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடுத்தடுத்தது வெடித்தன. இதில் அந்த தொழிற்சாலையே அதிர்ந்தது.

தொழிற்சாலையின் பல பகுதிகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் உயிரைக்காப்பற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

எனினும் இந்த கோரவிபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே தொழிற்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.