சீனாவிடம் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா தொடர்பான விபரங்களை கோரும் பிரித்தானியா

download 51
download 51

பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா குறித்த உறுதியான தகவல்களை வெளியிடுமாறு பிரித்தானியா, சீனாவை வலியுறுத்தியுள்ளது.

சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதி தலைவரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் டெனிஸ் வீராங்கனையினால் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது காணாமல் போயுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா காணாமல்போன விடயம் குறித்து தாம் மிகவும் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, இந்த விடயம் தம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாலியல் வல்லுறவு போன்ற விடயங்களில் பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

உலகின் எந்தப் பகுதியிலும் பாலியல் வல்லுறவு போன்ற மனித உரிமை மீறும் சம்பவங்களுக்கு எதிராக பிரித்தானியா தொடர்ந்தும் செயற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெனிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் தொடர்பாக, முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இரு முறை இரட்டையர் போட்டிகளில் கிறாண் சிலாம் வெற்றிக்கிண்ணத்தை பெற்ற 35 வயதான பெங் ஷூவாய் தொடர்பான விபரங்களை சீனா வெளியிட வேண்டும் என்ற அழுத்தங்கள் தற்போது சர்வதேச ரீதியாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.