எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒமைக்ரொன் பரவல் அதிகரிக்கும் அபாயம்!

omicron
omicron

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரொன் திரிபு தற்போது உலகளாவிய ரீதியில் பரவி வருகின்றது.

அதற்கமைய, 89 நாடுகளில் ஒமைக்ரொன் திரிபு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஒமைக்ரொன் திரிபு தொடர்பில் பிரபல அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி ஃபவுசி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த நேர்காணலில் “ஒமைக்ரொன் தொற்று, மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. அது தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையுடன் தொடர்புடைய பயணங்களால் ஒமைக்ரொன் பரவல் அதிகரிக்கக்கூடும். எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொருத்தவரை, கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும், பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு காணப்படும். எனவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.