நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு

niththi11
niththi11

இந்தியாவை விட்டு வெளியேறி உள்ள நித்யானந்தா சாமியார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

சாமியார் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.

இதைப்போல மேலும் சில வழக்குகள் அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாமியார் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஈகுவடார் நாட்டில் அவர் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கின.

ஆனால் நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.

‘நித்யானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் பல நாடுகளின் தூதரகங்களையும், அரசுகளையும் நாடியுள்ளோம். நித்யானந்தா குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம்.

ஆனால் இது தொடர்பாக ஈகுவடோர் நாட்டை தொடர்பு கொண்டபோது அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டார்.