எரிபொருள் விலையை அதிகரிக்க பாகிஸ்தான் நடவடிக்கை

561019
561019

சர்வதேச நாணய நிதியத்தினால், தமது நாட்டுக்கு வழங்கப்படும் 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக, எரிபொருள் விலையை அதிகரிக்க பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, பாகிஸ்தான் நாணயப் பெறுமதியில் 179 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 174 ரூபா 15 சதமாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபா 95 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக, கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைத நிலையில், பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிப்தா ஸ்மய்ல், எரிபொருள் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்வரையில், பாகிஸ்தானுக்கு, தொடர்ந்தும் கடன் வழங்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 6 பில்லியன் டொலர் கடன் உதவி வழங்குவதற்காக, இம்ரான் கானின் ஆட்சிக் காலத்தில் இணக்கம் வெளியிடப்பட்டது.

இதன்போது, எரிபொருள் விலையை அதிகரிக்க, ஜுன் மாதம் வரையில், அப்போதைய பிரதமர் இம்ரான் கான், கால அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.