கொரோனாவிலிருந்து எஜமானியை காப்பாற்றிய நாய்

kivi
kivi

தாய்வான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நாயின் மூலம் கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

குறித்த பெண் சீனாவிலுள்ள வுஹான் நகரத்திற்குச் செல்ல ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவரது செல்ல நாயான கிமி அவரது கடவுசீட்டை கடித்துக் குதறி விட்டது. அவரது கடவுச்சீட்டு முற்றிலுமாகச் சேதமடைந்ததால் அவரால் சீனாவுக்குச் செல்ல முடியவில்லை.

இதனால் கடும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களிலேயே வுஹான் நகரத்தில் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

இந்த நிலையில் தனது செல்ல நாய் தன்னுடைய கடவுசீட்டைக் கடித்துக் குதறியதன் மூலம் தான் ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை அந்தப் பெண்மணி உணர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அவர் தனது முகப்புத்தகத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் பெண்மணியின் செல்ல நாய் கிமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.