மணிலாவில் சிக்கியிருந்த பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்!

pilips
pilips

பிலிப்பைன்ஸ் – தலைநகர் மணிலாவில் வணிக வளாகத்தில் 30 பேரை 9 மணித்தியாலங்களாக பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஆயுததாரி சரணடைந்ததுடன், பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.

சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பணயக்கைதிகளை விடுவித்து வணிக வளாகத்திலிருந்து வெளியேறி பொலிஸாரிடம் சரணடைந்தார்.

வளாகத்தின் முன்னாள் காவலரான ஆர்ச்சி பராய் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் இன்று காலை முதல் வணிக வளகத்தில் 30 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்ததுடன், ஒருவரைச் சுட்டுக் காயமேற்படுத்தினார்.

இதனையடுத்து வணிக வளாகத்தைச் சூழ நூற்றுக்காணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயுததாரியுடன் 9 மணி நேரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதனையடுத்தே சற்றுமுன்னர் தான் பிடித்து வைத்திருந்தவர்களை ஆயுததாரி விடுவித்து சரணடைந்தார்.

ஆயுததாரி தனது குறைகளை கோடிட்டுக் காட்ட நிருபர்களிடமும் அதிகாரிகளிடமும் பேச அனுமதிக்கப்பட்டார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்ததாக ஆயுததாரியான ஜமோரா செய்தியாளர்களிடம் கூறினார்.