ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் – கிரேக்கப் படைகள் இடையே மோதல்!

More than 10000 migrants have been trying to breach the border 2
More than 10000 migrants have been trying to breach the border 2

துருக்கி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கிரேக்க பாதுகாப்புப் படையினர் இன்று புதன்கிழமை கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன் ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற அகதிகளுடன் இடம்பெற்ற மோதலில் அகதி ஒருவர் கிரேக்க படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்ததாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டவிரோத இடம்பெயர்வுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2016 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு இனிமேல் கட்டுப்பட மாட்டோம் என கடந்த வியாழக்கிழமை துருக்கி கூறியது.

இதனையடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் துருக்கி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று புதன்கிழமை கிரேக்கப் படைகளின் தாக்குதலில் புலம்பெயர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேரைக் காயமடைந்ததாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலை கிரேக்க அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெலியோஸ் பெட்சாஸ் மறுத்துள்ளார். துருக்கி பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இன்று அங்காராவில் செய்தியாளர்களிடம் பேசிய துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன், கிரேக்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். புலம்பெயர்ந்தோரை மதிக்க வேண்டும் என்று கூறினார்.

கடுமையான குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டாரளாக அறியப்பட்ட ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், துருக்கியிலிருந்து 130,000 புலம்பெயர்ந்தோர் ஏற்கனவே கிரேக்க எல்லையை கடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். முடிந்தவரை அவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.