மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற சவால் ஏற்படமாட்டாது- சு.க.!

1583331798 veerakumara dishanayakka gb
1583331798 veerakumara dishanayakka gb

“நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியமைத்து ‘மொட்டு’ சின்னத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும். ஐக்கிய தேசியக் கட்சி சின்னம் மற்றும் தலைமைத்துவம் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் என்றால் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெருபான்மையைப் பெற்றுக்கொள்வதில் எமக்கு சவால் ஏற்படாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைத்தே பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எமது கூட்டணிக்குள்ளும் சின்னம் தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருந்த போதிலும் நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் எமது பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்மானித்துக் கொண்டுள்ளோம். அதற்கமைய நாங்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். பொதுக் கூட்டணியின் பெயர் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அடுத்த வாரத்துக்குள் எமது பொதுக் கூட்டணியின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.

பொதுத்தேர்தலில் வெற்றி தொடர்பில் எமக்கு எந்தவித சவாலும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரின் செயற்பாடுகள் அவர்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தி வருகின்ற அதேவேளை எமக்குப் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்துள்ளனர். இந்நிலையில், நாங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிக்கொள்வதன் ஊடாக அதனை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்” – என்றார்.