சீனாவின் அடிமடியில் கை வைத்த ஜப்பான்!

7 dd
7 dd

கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான ஜப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஜப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் ஜப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தனது பொருளாதார ஊக்க பேக்கேஜின் ஒரு பகுதியாக, தங்கள் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றியமைக்க 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில், 220 பில்லியன் யென் (2 பில்லியன் டாலர்), உற்பத்தியை ஜப்பானுக்கு மாற்றும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு நகர்த்த விரும்புவோருக்கு 23.5 பில்லியன் யென் மதிப்பிலான ஊக்கத் தொகையையும் அளிக்க உள்ளார்கள்.

பொதுவாக சீனா, ஜப்பானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சீனா லாக்டவுனை அமல்படுத்தியது. எனவே, பிப்ரவரியில் சீனாவிலிருந்து இறக்குமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது.

ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார வல்லுனரான ஷினிச்சி செக்கி, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை உற்பத்தி தளமாக நம்புவதை குறைப்பதாக ஏற்கனவே பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாகவும், வரும் நாட்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். சீன உள்நாட்டு சந்தைக்கு சப்ளை செய்வதற்காக உற்பத்தி செய்யும் கார் கம்பெனிகள், போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சீனாவிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் டோக்கியோ ஷோகோ ரிசர்ச் லிமிடெட் ஆய்வு செய்த 2,600 நிறுவனங்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானவை, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் சீனாவைத் தவிர வேறு இடங்களுக்கு பரவலாக ஆலைகளை இடம் பெயரச் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தன. இப்போது அந்த விருப்பம் இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது