யூகத்தின் அடிப்படையில் எதையும் கூறாதீர் – வுகான் பரிசோதனை கூட அதிகாரி காட்டம்

4 hh 1
4 hh 1

சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து அந்த ஆய்வகத்தின் மூத்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வுகான் நகரில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. ஆனால் வுகானில் வைராலஜி ஆய்வு கூடத்தில் அந்த வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும் அது தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கொடிய வைரஸ்களை அழிப்பதில் அமெரிக்காவை விட தாங்கள் ஜாம்பவான்கள் என்பதை நிரூபிக்க வுகான் பரிசோதனை கூடத்தில் கொரோனா குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவுடன் வார்த்தை போர் நடத்தி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியிருந்தால் அது மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அமெரிக்காவை விட சீனாவில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது நம்பும்படியாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வைரஸ் வுகான் வைராலஜி ஆய்வுக் கூடத்தில் வேண்டுமென்றே பரப்பப்பட்டதாக கூறுவதை சீனா மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த பரிசோதனை கூடத்தில் உள்ள உயரதிகாரியான யுவான் ஸிம்மிங் கூறுகையில் எங்கள் ஆய்வகத்திலிருந்து வைரஸ் உருவாக எந்த வழியும் இல்லை. எங்கள் ஆய்வகத்துடன் தொடர்புடைய கோவிட் 19 பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதில் உண்மையில்லை.

வுகான் பரிசோதனை கூடத்தில் உள்ள ஊழியர்கள், மாணவ ஆராய்ச்சியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் என யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அமெரிக்கா வேண்டுமென்றே தவறான தகவலை தெரிவிக்கிறது. சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வைரஸ் வெளியேறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவில் இல்லை. வெறும் ஊகத்தின் அடிப்படையில் அவர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகளின் நல்லுறவை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டினால் பாதிக்கப்படாது என நம்புகிறேன். இந்த ஆய்வகத்தில் என்ன மாதிரியான ஆய்வுகள் நடக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அது போல் வைரஸ்கள், ரத்த மாதிரிகளை எப்படி கையாளுவது என்பதும் எங்களுக்கு தெரியும் என்றார்.