கிம் உடல்நிலை எப்படி இருக்கிறது -தென் கொரிய ஊடகம் கூறுவது என்ன !

1 kim
1 kim

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நாட்டு உளவுத்துறை கூறிய தகவல் என்று மேற்கொண்டு அந்த செய்தி இதை சுட்டிக்காட்டியது.

சர்வாதிகாரியாக அறியபடக்கூடிய கிம் உடல்நிலை பற்றி உலகில் உள்ள அத்தனை நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அதிலும் முக்கியமாக அதன் எதிரி நாடான தென் கொரியா இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.

இதுபற்றி தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க ஊடகத்தின் செய்தி பற்றி உடனடியாக எதையும் உறுதிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று கூறினார்.

இதனிடையே தென் கொரிய ஊடகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் சரியானது என்று கூறிவிட முடியாது என்று கூறியுள்ளது.

கிங் உன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றபோதிலும், அமெரிக்கா கூறுவதை போல மிக மோசமான நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்று தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன் உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் ஒரு ரிசார்ட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தென் கொரிய ஊடகம் ‘டெய்லி என்கே’ கூறியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி கிம் ஜான் உன் இதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாகவும், அதன் பிறகு அவர் ஓய்வில் இருந்து வருவதாகவும் மற்றபடி உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சரியல்ல என்றும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

தென் கொரிய நாட்டு அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் 15ம் திகதி கிம் உன் தாத்தா மற்றும் அந்த நாட்டின் நிறுவன தந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிபர் பங்கேற்கவில்லை என்பதைத் தொடர்ந்துதான் அவரது உடல்நிலை தொடர்பாக அனைத்து நாட்டு உளவு அமைப்புகளும் விசாரணையை ஆரம்பித்தன என்கிறார்.

சியோலை தலைமையிடமாக கொண்ட வெப்சைட் டெய்லி என்.கே. சில உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி, கிம் உன், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹியாங்சனின் மவுண்ட் கும்காங் ரிசார்ட் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் ஓய்வெடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால், கிம் “மோசமான உடல்நிலை பிரச்சினையில்” இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் உளவு தகவல்கள் சேகரிப்பது கஷ்டம் என்பதால், இதில் எந்த தகவல் சரியானது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.