பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான்

5 3
5 3

ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும் அந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகம் எங்கும் லாக்டவுன் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கார் உற்பத்தி முதல் காய்கறி வியாபாரம் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் உணவில்லாமல் பசிக் கொடுமையால் வாடி வருகிறார்கள்.

பாலியல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவினால் தங்களை யாரும் தேடி வராததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். சேமிப்புகளும் இல்லாமல் வேறு வழிகளில் வருமானமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் ஜப்பானில் பாலியல் தொழிலாளர்களுக்கு நிதியுதவியை அந்நாட்டு அரசு வழங்கியது. ஆனால் இந்த நிதியுதவி அவர்களுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கிறார்கள். வேறு வேலை தேடலாம் என சென்றாலும் தற்போதைய பொருளாதார சூழலால் வேலையும் கிடைப்பதில்லை என கவலைப்படுகிறார்கள்.

பணியில்லாமல் அவதிப்படும் இவர்கள் அந்த நிதியுதவியை எப்படி பெறுவது என்பது குறித்து தெரியாமல் அவதிப்படுகிறார்கள்.

விபச்சாரமும் பணத்திற்காக உடலுறவு கொள்வதும் ஜப்பானில் சட்டப்படி குற்றம். மற்றபடி மசாஜ் பார்லர்களில் வாய் வழி உறவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பாலியல் தொழில் மூலம் ஜப்பானுக்கு ஆண்டுக்கு 2400 கோடி டாலர்கள் வருமானம் வருகிறது.

இந்த நிலையில் ஜப்பான் அரசு நிவாரண நிதியை ஒதுக்கிய போது பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக நடத்துவோருக்கு நிதி இல்லை என அற்வித்தது. உடனே எதிர்க்கட்சிகள் இதை தொழில் ரீதியிலான பாகுபாடு என விமர்சனம் செய்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நிதியுதவியை பெறுவதிலிருந்து பாலியல் தொழிலாளர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். அவர்களும் அவர்களது குழந்தைகளும் மற்றவர்களை போல் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு நிறுவனம் அரசுக்கு கடிதம் எழுதியது.

மேலும் #NightWorkIsAlsoWork என்ற ஹேஷ்டேக் வைரலானது. இதையடுத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் அரசு அறிவித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.