கூடுதலான இழப்பீட்டு தொகையை கோர உள்ள அமெரிக்கா

0 hh 2
0 hh 2

வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜேர்மனி கேட்கும் தொகையை விட கூடுதலான இழப்பீட்டு தொகையை அமெரிக்கா கோர உள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் என்பதில் உறுதியாக உள்ள அமெரிக்கா, இதற்கான ஆதாரத்தை வெகு விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாக கூறிவருகின்றது.

இந்த நிலையில் சீனாவின் செயல்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

‘சீனாவிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை பல விதத்தில் நிருபிக்க முடியும். இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் செயல்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை.

ஆரம்பத்திலேயே சீனா வெளிப்படைத் தன்மையுடன் இந்த வைரஸ் குறித்து உலக நாடுகள் மத்தியில் எச்சரித்து இருந்தால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இது தடுக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக உலகம் முழுவதும் பரவி இருக்காது. உரிய நேரத்தில் விசாரணை குறித்த முழு விபரங்கள் தெரிவிக்கப்படும்.

வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜேர்மனி கேட்கும் தொகையை விட கூடுதலான இழப்பீட்டு தொகையை அமெரிக்கா கோர உள்ளது. இது தொடர்பான இறுதித் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிச்சயம் கணிசமான தொகையாகத் தான் கேட்கப்பட உள்ளது. இது அமெரிக்கா, உலகிற்கு ஏற்பட்ட சேதமாகும்’ என கூறினார்.