எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு!

no 35
no 35

3 வாரங்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடத்தில் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் வடகொரியா ராணுவமும் தென் கொரிய ராணுவமும் துப்பாக்கிச் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் அவரது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து கிட்டதட்ட 3 வாரங்களுக்கு அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன.

மேலும் அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரால் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது என கூறி வடகொரியாவின் அடுத்த அதிபர் யார் என அளவிற்கு ஊடகங்கள் அலசி வந்தன.

இந்த நிலையில் கபாலி படத்தில் வரும் ரஜினிகாந்த் சொல்வதை போல் “திரும்பி வந்துட்டேனு சொல்லு” என எதிரி நாடுகளுக்கு சொல்லும் விதமாக அவர் கெத்தாக நேற்றைய தினம் ஒரு ஆலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதை அந்நாட்டு மக்கள் கை தட்டி வரவேற்று ஆரவாரம் செய்தனர். கிம் அந்நாட்டு மக்களுக்கு கடவுள் மாதிரி என்பதால் அங்கிருந்து அவருக்கு இத்தனை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிம் தோன்றிய அடுத்த நாளே தென் கொரியா நோக்கி வடகொரிய வீரர்கள் எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பதிலுக்கு தென்கொரிய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த போதும் தென்கொரியா அதை மறுத்தது. இந்த நிலையில் தென் கொரியா மீது வடகொரியா ஏன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென் கொரிய நாட்டின் ராணுவ படை இணை தளபதி கூறுகையில் தென் கொரிய ராணுவ முகாம்கள் மீது வடகொரியா பல முறை துப்பாக்கியால் சுட்டது.

எனினும் தென் கொரிய ராணுவத்தினருக்கு எந்த வித காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இதற்கு பதிலடியாக நாங்கள் இருமுறை துப்பாக்கியால் சுட்டோம். பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்தோம். இவர்கள் திடீரென எங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது துப்பாக்கியை சூட்டை நடத்தியது ஏன் என்பது தெரியவில்லை என்றார்.

1953-ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியில் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. அந்த போர் ஒப்பந்தத்தின் போது இரு நாட்டுக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிகளில் கண்ணி வெடிகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள ராணுவ பதற்றத்தை தணிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு பியாங்கியாங்கில் நடந்த ஒரு மாநாட்டில் கிம்மும் தென் கொரிய அதிபர் மூன் ஜோவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்களின் படி வடகொரியா நடந்து கொள்ளாததால் பியாங்கியாங்குடனான தொடர்பை சியோல் பெருமளவு துண்டித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிம் ஜாங் உன் தோன்றிய அடுத்த நாளே இது போன்ற துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.