பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு ஆர்வம் இல்லை: ட்ரம்ப்

do 1
do 1

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு துளியும் ஆர்வம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரவித்துள்ளார்.

இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ‘சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறீர்களா? என ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இல்லை. எனக்கு அந்த எண்ணமே இல்லை. அதில் எனக்கு துளியும் ஆர்வம் இல்லை. கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்’ என கூறினார்.

சீனாவுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்க சீனா விரும்புவதாக சீன ஊடகத்தில் செய்தி வெளியானமை சுட்டிக்காட்டத்தக்கது.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு சீனாவே காரணம் என கருதுகின்றது. இதனால் சீனா மீது ஜனாதிபதி ட்ரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார். இந்த பின்னணியை கருத்திற்கொண்டே ட்ரம்ப் இவ்வாறு கூறியிருக்க கூடுமென நம்பப்படுகின்றது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான முதற்கட்ட ஒப்பந்தம், கடந்த ஜனவரி 15ஆம் திகதி வொஷிங்டனில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கையெழுத்தானது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின்படி சீனா, எதிர்வரும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 200 பில்லியன் டொலர் அளவுக்கு இறுக்குமதி செய்யவேண்டும்.