ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்

50 1
50 1

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ்’ மகப்பேற்று மருத்துவமனையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சீருடை அணிந்த குறைந்தது மூன்று தாக்குதல்தாரிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு மணிநேர நீண்ட போராட்டத்தின் பின்னர், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, 80இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியன் கூறுகையில், “மூன்று வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

100 படுக்கைகள் கொண்ட தஸ்தி பார்ச்சியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனை ஏன் குறிவைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான செயல் மற்றும் போர்க்குற்றம்” எனக் கூறியுள்ளார்.

எனினும், இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.