இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது

1f
1f

‘இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு சொந்தமான நபரின் அனுமதி இன்றி, இணையதளங்களுக்கு துணை உரிமத்தை வழங்க தங்களது சேவை விதிமுறைகள் அனுமதிக்கவில்லை ‘என இன்ஸ்டாகிராம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பதிப்புரிமைக்கு உரிமை கோருவதை தவிர்க்க, நேரடியாக புகைப்படங்களை வாங்காமல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பயன்படுத்தி வந்த இணையதளங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளது.

‘எங்கள் விதிமுறைகள் துணை உரிமத்தை வழங்க அனுமதிக்கும்போது, எங்கள் உட்பொதிந்த ஏபிஐக்கு நாங்கள் அதை வழங்குவதில்லை’என்று ஒரு பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆர்ஸ் டெக்னிகாவிடம் கூறினார்.

எளிமையாக சொல்வதென்றால், ஒரு இணையதளம், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட புகைப்படக் கலைஞர்களின் படத்தை தங்கள் இணையதளத்தில் பயன்படுத்தி கொள்ள, புகைப்படக் கலைஞர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இல்லையெனில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம். இன்ஸ்டாகிராமின் சேவை விதிமுறைகளின் அடிப்படையில் புகைப்படக் கலைஞரின் புகாரை பத்திரிகை தள்ளுபடி செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கிய நியூயார்க் நீதிபதி , அமெரிக்காவை சேர்ந்த வார பத்திரிகையான நியூஸ்வீக் மீது வழக்கு தொடர அனுமதியளித்தார்.

ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு டிஜிட்டல் ஊடகமான மாஷபில் (Mashable) தொடர்புடைய ஒரு வித்தியாசமான வழக்கில், இன்ஸ்டாகிராம் தன்னுடைய தளத்தில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களுக்கு துணை உரிமம் வழங்க முடியுமென மற்றொரு நீதிபதி தீர்ப்பளித்தார். இரு வேறு தீர்ப்புகளால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், புகைப்பட கலைஞர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் தனது முடிவை தெளிவுப்படுத்தியுள்ளது. புகைப்பட கலைஞர்கள் தங்களது படங்களை பயன்படுத்தும் இணையதளங்களுடன் பேச்சு நடத்த எளிதாகும்.

பதிப்புரிமை குறித்த ஹெல்ப்.இன்ஸ்டாகிராம்.காம் தளத்தில் , உங்கள் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கும், அனுமதியின்றி உங்கள் படைப்புகளை பயன்படுத்துவதை தடுக்கும் உரிமையும் உள்ளதென கூறப்பட்டுள்ளது.மேலும் புகைப்பட கலைஞர்கள் தங்களது படைப்புகளை பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்த முடியும் எனவும், புகைப்பட கலைஞர்கள் தனிப்பட்ட (Private account) கணக்காக இருந்தால், அனுமதியின்றி பிறர் பயன்படுத்துவதை குறைக்குமென இன்ஸ்டாகிராமின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.