‘தென்கொரியா தான் எங்கள் எதிரி’: மோதலுக்கு வடகொரியா பிள்ளையார் சுழி

i3 9 3
i3 9 3

கடந்த சில வாரங்களாக தென்கொரியா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் வடகொரியா, இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு அலுவலகம் மற்றும் பிற திட்டங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ஆளும் தொழிலாளர் கட்சியின், மத்திய குழு துணைத்தலைவர் கிம் யோங் சோல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள், ‘தென்கொரியாவுடனான தொடர்புகள் அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும்’ என, தீர்மானம் ஒன்றை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘தென்கொரியாவுக்கு எதிரி நாட்டு அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, ‘வடகொரிய அதிபர் மற்றும் தென்கொரியா பிரதமர் அலுவலகங்களுக்கு இடையிலான ஹாட்லைன்களும் இருநாடுகளுக்கு இடையிலான பிற தகவல் தொடர்பு வழிகளும் துண்டிக்கப்படுகிறது’ என, வடகொரியா அறிவித்துள்ளது.


இதை உறுதிபடுத்தும் வகையில், ‘வடகொரிய அதிகாரிகளின் தொடர்பு அலுவலகங்களுக்கு, தென்கொரியாவில் இருந்து வரும் வழக்கமான அழைப்புகளுக்கு நேற்று பதிலளிக்கவில்லை’ என, தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘நெருக்கடி நிலையின்போது தகவல்தொடர்புகள் அதிகளவில் தேவைப்படும். தற்போது, கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள், தென்கொரியாவுக்கு மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்’ என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.