கொரோனா ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல: டிரம்ப் கட்சி

i3 19 3
i3 19 3

தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என டிரம்பின் குடியரசு கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ., 3ம் திகதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்காக ஜனவரி மாதம் முதலே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வந்த டிரம்ப், கடைசியாக மார்ச் 2ல் பிரசாரக் கூட்டம் நடத்தினார்.

அதன் பிறகு கொரோனா தாக்கம் உச்சத்தை அடைந்ததால், பிரசாரத்தை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப், அடுத்ததாக ஜூன் 19ல் மீண்டும் தொடங்குகிறார்.

எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடன் ஏப்ரல் மாதத்தில் தான் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால் அவர், இனிமேல் தான் தேர்தல் பிரசார கூட்டத்தை தொடங்கவுள்ளார்.

தற்போதைய அமெரிக்க சூழலை பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்கு பிரச்னையில் டிரம்ப் நிர்வாகம் திறம்பட செயல்படாதது, கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிடின் உயிரிழப்பு, டிரம்பின் தவறான முடிவுகள் என பலவும் டிரம்பை சரிவு நிலைக்கு கொண்டு சென்று வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய வெள்ளை இனத்தவர்களின் அமோக ஆதரவை எப்போதும் பெற்றுவரும் குடியரசு கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜூன் 19ல் துல்சா நகரில் டிரம்ப் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு 19 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

இதில் பங்கேற்க இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு டிரம்ப் சார்பில் பொறுப்பு துறப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ‛இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் 19,000 பேரும் கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ளவது பார்வையாளர்களின் பொறுப்பு.

இதில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கு தாமோ தமது கட்சியோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் யாரும் பொறுப்பாக மாட்டார்கள்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டிரம்ப் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.