இந்தியாவும் ஜப்பானும் இணையும் நிலவு திட்டம்

i3 18 3
i3 18 3

இந்தியாவும் ஜப்பானும் இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ம் ஆண்டிற்கு பின் செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா அறிவித்துள்ளது.

நிலவின் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இது தொடர்பான விஷயங்களை ஜப்பான் நிறுவனம் ஜாக்சா வெளியிட்டுள்ளது

நிலவின் மேற்பரப்பில் இறங்கும் லாண்டர், லாண்டரிலிருந்து வெளிப்பட்டு நிலவின் தரையில் ஆய்வு செய்யும் ஆய்வூர்தி ஆகிய இரண்டும் இத்திட்டத்தில் இடம் பெறுகிறது. இதன்படி லாண்டரையும், ஆய்வூர்தியையும் ஜப்பான் வடிவமைக்கிறது. தரையிறக்கும் அமைப்பை இஸ்ரோ தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள மிட்ஸுபிஷி தயாரிப்பில் உருவாகும் எச் 3 ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிலவின் துருவப் பகுதியில் தண்ணீர் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் நீரானது என்ன வடிவில் எந்த அளவு உள்ளது என்பதையும், எதிர்காலத்தில் அதை விண்வெளித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதையும் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஜாக்சா அறிவித்துள்ளது.

மேலும் நிலவில் தரையிறங்கும் ஆய்வூர்தியானது, தண்ணீர் இருக்க கூடிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள தனிமங்களை ஆய்வு செய்து ஹைட்ரஜனை கண்டறிந்தால், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தண்ணீர் இருப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு ஜாக்சா அறிவித்துள்ளது.

சென்ற முறை விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இந்த கூட்டு முயற்சி வெற்றி பெற்றால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு நிலவின் தரையில் வெற்றிகரமாக லாண்டரை இறக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும், ஜப்பானும் இடம் பெறும்