ஆரம்பகால தடுப்பூசிகள் கொரோனாவை தடுக்காது

i3 21 3
i3 21 3

தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் ஆரம்பகால தடுப்பூசிகள் நோய் தொற்றை தடுக்காது, ஆனால் நோயிலிருந்து உயிரை பாதுகாக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய் காலத்திற்கு முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, உலக தலைவர்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எதிர்பார்த்திருக்கின்றனர். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரமாக உள்ளன.

இதற்காக பல நூறு கோடி டாலர்களை அரசுகள் செலவழித்துள்ளது. சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் என்ற சிறிய நிறுவனம் தொடங்கி, பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா போன்ற பெரிய நிறுவனங்கள் வரை தடுப்பூசி தயாரிப்பில் வளர்ச்சி கண்டுள்ளன.

இவற்றில் ஒரு தடுப்பு மருந்து விலங்கு பரிசோதனையில் நோயின் கடுமையை குறைத்தது. ஆனால் தொற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனை மனிதர்களுக்கு சோதிக்கின்றனர். மிகவும் பயனுள்ள மருந்து சந்தைக்கு வரும் வரை இதை பரவலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தடுப்பூசி, நோயிலிருந்து பாதுகாத்தால் போதும், நோய் தொற்றை தடுக்க வேண்டிய அவசியமில்லை என கலிபோர்னியாவின் நோயெதிர்ப்பு நிபுணரும் தடுப்பூசி ஆராய்ச்சியாளருமான டென்னிஸ் பர்டன் கூறியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து ஒரு புதுமையான அணுகுமுறையை பயன்படுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ள சோதனை தடுப்பு மருந்துகளில் கால்வாசிக்கும் மேல், குறிப்பாக மனித சோதனையில் உள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் ஆக்ஸ்போர்டு அணுமுறையையே பின்பற்றுகின்றன.

அதாவது, கொரோனா வைரஸின் மரபணுக்கள் வேறுபட்ட, பாதிப்பில்லாத வைரஸில் செலுத்தப்படுகின்றன. அவை மனித நோயெதிர்ப்பு மண்டலத்தால் அங்கீகரிக்கப்பட்ட புரதங்களை உருவாக்குகின்றன, இது தொற்றுநோய்க்கு எதிராக ஒரு உண்மையான பாதுகாப்பு அரணை அமைக்கிறது.

ஆக்ஸ்போர்டுடன் கூட்டுசேர்ந்துள்ள அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு மருந்து வழங்கத் தொடங்கும் என்றும், அதனை தொடர்ந்து அடுத்த மாதத்தில் நிதி உதவிய அமெரிக்காவுக்கும் மருந்துகளை சப்ளை செய்யும் என கூறப்படுகிறது. மேலும் அஸ்ட்ராஜெனெகா, நான்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க கடந்த சனியன்று ஒப்பந்தம் போட்டுள்ளது.