அவுஸ்ரேலியாவில் வேலை இழக்கும் ஆறாயிரம் குவான்டாஸ் ஊழியர்கள்!

Coronavirus Qantas
Coronavirus Qantas

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட வருவாய் இழப்புக் காரணமாக அவுஸ்ரேலியாவின் குவான்டாஸ் (Qantas) நிறுவனம் 6 ஆயிரம் பேரை பணியிலிருந்து குறைக்கவுள்ளதாக இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த ஊழியர்களின் எண்ணிக்கை கொரோனா நெருக்கடிக்கு முன்னர் இருந்த விமான நிறுவன பணியாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலான விமானப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இந்த ஆண்டு இறுதிவரை மூடுவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதன் ஒருகட்டமாக, நியூசிலாந்திற்கான விமானங்களைத் தவிர ஒக்ரோபர் பிற்பகுதி வரை அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் இரத்துச்செய்யும் நிலை குவான்டாஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமை நிர்வாகி அலன் ஜோய்ஸ் (Alan Joyce) இன்று தெரிவிக்கையில், “அடுத்த மூன்று ஆண்டுகளில் விமான நிறுவனம் சிறிய வருவாயை எதிர்பார்க்கிறது. எனினும், எங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது ஆயிரக்கணக்கான மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால், பில்லியன் கணக்கான டொலர் வருவாயின் சரிவிலிருந்து ஓரளவு மீண்டு சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இந்த ஆட்குறைப்பு எங்களுக்கு சிறிய தேர்வாக இருக்கும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.