ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு ஷி ஜின்பிங் எச்சரிக்கை

china president
china president

நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனாவைப் பிரிக்க நினைத்தால் “நசுங்கிய உடல்களும், நொருங்கிய எலும்புகளும்” மிஞ்சும் என ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று ஹாங்காங்கில் தொடங்கிய பல அமைதியான போராட்டங்கள் கலவரத் தடுப்பு போலீஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையேயான வன்முறையாக முடிந்தது.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கியது. இந்த மசோதா அந்நாட்டின் நீதிச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்பட்டது.

அந்த மசோதா கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், போராட்டக்காரர்கள் முழுமையான ஜனநாயகம் கோரியும், பொலிஸாரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் போராடி வருகின்றனர்.