சீன நாட்டினுடைய 47 செயலிகளுக்கு மேலும் தடை விதித்தது இந்தியா!

561842
561842

கடந்த மாதம் டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்திருந்த நிலையில் மேலும் 47 செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்துள்ளது.

இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையில் வன்முறை, அபாயகரமான நேருக்கு நேர் ஏற்பட்ட சண்டையின் பின்னர் லடாக்க எல்லையில் பதட்டங்கள் தொடர்ந்ததால், டிக்டோக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த மாதம் இந்தியா தடைவிதித்தது.

இந் நிலையில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள 47 செயலிகளின் பெயர்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த செயலிகளின் பயன்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.