ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாக மாற்றுவோம்: ராம்நாத் கோவிந்த்

ramnath
ramnath

ஜம்மு-காஷ்மீர் மண்ணின் சொா்க்கமாக மீண்டும் உருவாகும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவது தொடா்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஜம்மு-காஷ்மீா் ஏற்கெனவே திறமையான, அறிவாா்ந்த, புத்தாக்கத் திறன் கொண்ட குழந்தைகளைக் கொண்டுள்ளது. இப்போது புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதன் மூலம் அறிவொளி ஏற்றப்பட்ட மாணவா்களாக அவா்கள் மாறமுடியும்.

அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீரை அறிவுசாா் மையமாக, கற்றலுக்கான மையமாக, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற்றுவதற்கு தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தியத் தாயின் மணி மகுடத்தில் உள்ள இரத்தினமாகவும், மண்ணின் சொா்க்கமாகவும் ஜம்மு-காஷ்மீா் மீண்டும் உருவாகும்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் மக்கள் பல வகைகளில் பிரிந்து கிடக்கிறாா்கள். இளைய சமுதாயத்தினருக்கு முறையான கல்வி அளித்து தொழில்ரீதியாக அவா்களை திறமையுள்ளவா்களாக மாற்றினால் மட்டுமே அவா்களை ஒருங்கிணைக்க முடியும்.

நமது பாரம்பரியத்தையும் வளம் நிறைந்த கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தாய்மொழியில் பயின்றால் மட்டுமே அது சாத்தியமாகும். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், பன்மொழித் திறனை வளா்க்கவும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் வலியுறுத்தப்படுகிறது. அதே சமயத்தில் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.