கடல் மட்டம் உயருவதால் தென்கிழக்கு ஆசியாவிற்கு அதிகளவில் பாதிப்பு

antonio guterres
antonio guterres

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் கணிக்கப்பட்டதைவிட வேகமாக உயர்ந்து வருவதனால் தென்கிழக்காசிய நாடுகள் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர்
அண்டனியோ குட்டரெஸ் நிருபர்களிடம் கூறியதாவது;

2050ம் ஆண்டுக்குள் உலகில் 30 கோடி மக்கள் கடல் நீரால் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் கணிக்கப்பட்டதைவிட வேகமாக உயர்ந்து வருகிறது. அரசுகளின் நடவடிக்கைகளைவிட பருவநிலை மாற்றம் வேகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

தென்கிழக்கு ஆசியா தான் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கடல் மட்டம் உயருவதால் மிகவும் பாதிக்கும். தாய்லாந்து மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கடல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் பூமிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் இது.

விஞ்ஞானிகள் சொல்வதை கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளதை அரசுகளுக்கும், உள்ளூர் நிருவாகங்களுக்கும், மக்களுக்கும் ஐ.நா. கவலையுடன் கவனத்துக்கு கொண்டு வருகிறது.

நிலத்தில் இருந்து எடுக்கப்படும் எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நிலக்கரியை பயன்படுத்தும் புதிய அனல் மின்நிலையங்கள் நிறுவுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.