நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு !

image 380x226 5fbf6970e5ca6
image 380x226 5fbf6970e5ca6

புதுச்சேரி – மரக்காணம் இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 85 முகாம்கள் அமைக்கப்பட்டு, 40 ஆயிரத்து 182 குழந்தைகள் உட்பட 2 இலட்சத்து 27ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

921 மருத்துவ முகாம்களும், 234 நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு தேவையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேநேரம், ஆடுகள், மாடுகள் என 26 கால்நடைகள் நிவர் புயலுக்கு பலியாகியுள்ளன. மேலும் 14 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் மொத்தமாக 101 வீடுகள் சேதமடைந்துள்ளன என்பதுடன், வீதியோரங்களில் இருந்த 380 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அத்துடன், 19 மின் கம்பங்களும் சாய்ந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகம் முழுவதும் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் முன்கூட்டியே திட்டுமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததின் விளைவாக, பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.