தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

1559983887 6115
1559983887 6115

தயிர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஓர் உணவாகும், பலர் மதிய உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். தயிர் செரிமானத்தை எளிதாக்குகிறது.  லாக்டோபாசிலஸ் என்னும் பாக்டீரியா பாலை புளிக்க வைத்து தயிராக்குகிறது, இந்த பாக்டீரியா உடலின் செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் தொற்றுநோய்க்கு ஆளாகாமல் குடலை அவை பாதுகாக்கின்றன. இந்த வகை பாக்டீரியாக்களை புரோபயாடிக்குகள்  (நல்ல பாக்டீரியா) என்றும் அழைக்கப்படுகிறது, இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

தயிரில் உள்ள சத்துக்கள்

தயிரில் கல்சியம், விற்றமின் பி -2, விற்றமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தயிர் பாலை விட எளிதில் ஜீரணிக்க கூடியது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள், பாலை உட்கொள்ள முடியாதவர்கள்  தயிரை உட்கொள்ளலாம். தயிரின் நன்மைகள், பயன்கள் பற்றி பார்ப்போம்.

செரிமானத்திற்கு நல்லது

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல், அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடுவது உங்கள் வயிற்றுக்கு நல்லது. இது வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது.  செரிமான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

தயிர் உங்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது, பிரியாணி போன்ற அதிக மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு தயிர் உதவும். மேலும் உணவுகள் மூலம்  உருவாகும் உடல் சூட்டை தணிக்கும், காரமான உணவுகள்,அதிக மசாலாக்கள் கொண்ட உணவுகள் சாப்பிடும் போது தயிரை சேர்த்துக் கொள்ளலாம். 

வயிற்று வெப்பத்தை தணிக்க தயிர்

வயிற்றில் வெப்பம் அல்லது எரிச்சல் இருந்தால்  தயிரில் இருந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு அல்லது உடல் சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்க ஒரு கப் தயிரில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தயிர் சாதம் சாப்பிடலாம். 

குடல் ஆரோக்கியம் 

தயிரில் நல்ல பாக்டீரியா உள்ளது, இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிர் சாப்பிடுவது குடலுக்கு நன்மை உண்டாகும். இது நம் உடலுக்குள் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது, இந்த நல்ல பாக்டீரியா அல்சர் (வயிற்றுப்புண்) போன்ற  பிரச்சனைகளிலிருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

எலும்புகளுக்கு நல்லது

தயிரை தினமும் உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும். 3/4 கப் தயிரில் 275 மிகி கல்சியம் உள்ளது.

கால்சியம் மற்றும் பொஸ்பரஸ் நிறைந்த  தயிர் உங்கள் பற்களையும் எலும்புகளையும் வலுவாக்குகிறது. இது கீல்வாதத்தை  தடுக்க உதவுகிறது. 

இதயத்திற்கு நல்லது

தயிர் இதய பிரச்சினைகளைத் தடுக்கவும் குறைக்கவும் உதவுகிறது.  

தயிரில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சில சிறப்பு புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இரத்த அழுத்தம்

தயிர் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். வழக்கமாக தயிர் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும். கொழுப்பில்லாத தயிரை  சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி 

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும், அவை நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளன, இது உடலுக்குத் தேவை. 

தயிரில் நல்ல பற்டீரியா இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. நினைவில் கொள்ளுங்கள் 70-80% நோய் எதிர்ப்பு சக்தி குடலில் உள்ளது, இது பெரும்பாலும் குடல் பாக்டீரியாவால் நிர்வகிக்கப்படுகிறது.

தயிரில் உள்ள குடல் நட்பு பற்டீரியாக்கள் நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றது, மற்றும் குடல் மற்றும் குடல் பாதையைப் பாதுகாக்கின்றது. 

தயிர் உட்கொள்வது வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் போன்றவற்றை விரைவாக குணப்படுத்துகிறது.

சரும ஆரோக்கியம் 

தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் உலர்ந்த சருமத்தை இயற்கையாக குணப்படுத்துகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் எக்ஸ்போலியேட்டராக செயல்பட்டு இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் முதுமையின் ஆரம்ப அறிகுறிகளுக்கு எதிராக போராடுகிறது.