இந்த அட்டவணையில் முட்டை மூன்று உள்ளது பாருங்கள். மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகில இலங்கை மெரிட் மூலம் மருத்துவ பீடம் தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை பூச்சியம்.
காரணம் என்ன? போர் தின்ற மண்.இப்போது உயர்தரம், சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் தங்களது முக்கியமான அறிவு வளரும் பருவத்தில் படிப்பதை விட்டு போரில் இருந்து தப்பிப் பிழைக்க ஓடிக்கொண்டிருந்த பிள்ளைகள்.
அந்த வகையில் பிள்ளைகளையோ ஆசிரியர்களையோ குறை சொல்ல முடியாது.ஆனால் , போருக்கு பின்னான சூழலில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் பரீட்சை எழுதும் போது மாற்றம் வருமா?இல்லை. போனமுறை சாதாரணதர பரீட்சை முடிவு வந்தபின், ஒரு சமூக அக்கறையுள்ள ஆசிரியர் என்னிடம் சொன்னது, ” இரண்டு பிள்ளைகளுக்கு நல்ல ரிசல்ட் சேர், நான் அவர்களின் வீட்டில் கதைத்து அந்த பிள்ளைகளை பயோ படிக்க ஓகே சொல்லியிருந்தார்கள்.
ஆனா, நேற்று அதிபர் பயங்காட்டி அந்த பிள்ளைகளை கொமர்ஸ் படிக்க வைத்துள்ளார்”என்ன பயம்?”பயோ படிச்சா இங்க ஒழுங்கான தனியார் ஆசிரியர்கள் கூட இல்ல. கிளிநொச்சிக்குத்தான் போகனும். அதால பயோ படிச்சு வாழ்க்கையை வீணாக்காமல் கொமர்ஸ் படியுங்கள்” இதுதான் அந்த பயம் காட்டல்.கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் எனது ஊரில் சாதாரணதரம் சித்தி பெற்ற எனது இரு அக்காமாரும் கணித, விஞ்ஞான பிரிவில் படிக்க நகருக்கு போக நினைத்தபோது ஊர்ப்பாடசாலையில் இப்படி சொன்னது மட்டுமல்ல, ஊரோட இருந்தா ஏதாவது யூனிவர்சிட்டியாவது கிடைக்கும் , டவுனுக்கு போய் ஒன்றுமில்லாம வரப்போகிறார்கள் என கேலி செய்ததாக கேள்விப்பட்டிருந்தேன்.
பிறகு அவர்கள் பொறியியல் பீடமும் , மருத்துவ பீடமும் தெரிவானார்கள்.அந்த முல்லைத்தீவு சம்பவத்தை கேட்டதும் நமது இனம் 30 வருடத்திற்கு முன் நின்ற அதே இடத்தில்தான் இன்னும் நின்றுகொண்டிருப்பது புரிந்தது.என்னதான் அபிவிருத்தி என பேசினாலும், யுத்தம் முடிந்து 10 வருடத்தின் பின்னும் ஒரு மாவட்ட மாணவர்கள், தங்கள் மாவட்டத்திலேயே தங்கியிருந்து கணித விஞ்ஞான பாடங்கள் மற்ற மாவட்ட மாணவர்கள் போல படிக்கலாமென்ற நிலையை உருவாக்காத ஒரு இனம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்?
பத்து வருடத்தின் உள்ளே முஸ்லிம் சமூகம் தனக்கென ஒரு முஸ்லிம் பாடசாலையை முல்லைத்தீவில் உருவாக்க முடியும்போது, நம்மால் கணித விஞ்ஞான பிரிவுக்கு சிறந்த கட்டமைப்பை கொண்ட ஒரு பாடசாலை உருவாக்க முடியாது போனது ஏன்?அடுத்த முக்கிய காரணம்!ஆரம்ப கல்வியில் கோட்டைவிடுவது.முன்பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள் பற்றி விரிவாக எழுத வேண்டும். தனிப்பதிவாக எழுதுகிறேன்.ஒரு கல்வி அதிகாரி சொன்ன கசப்பான உண்மையை சொல்லி முடிக்கிறேன்.”என்னதான் கஸ்டப்பட்டாலும் ஓஎல் ரிசல்டை முன்னேற்ற ஏலாது சேர். ஆரம்ப பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும். ஒழுங்கா எழுதக்கூடத் தெரியாத பிள்ளைகள் ஓஎல் வருதுகள். அவர்களை எப்படி பாஸ் பண்ண வைப்பது?
-சிவச்சந்திரன் சிவஞானம்