பண்பாடு இல்லையேல் இனமில்லை!

thai
thai

பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த கற்கைகளின்போது ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. நாகரிமும் பண்பாடும் ஒன்றா? அல்லது அவற்றுக்கு இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது? என்றவொரு கேள்வி பண்பாடு மானுடவியலில் மாத்திரமின்றி தொடர்பாடலில் கூட ஆராயப்படுகிறது. பண்பாடு என்பது இனங்களின், சமூகங்களின் அடையாளம். இன்னும் சொல்லப் போனால் வாழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் பண்பாடு அசைவுள்ள ஒரு செயற்பாடு என்றே அண்மையில் காலமாகிய தமிழக பண்பாட்டறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.

பண்பாட்டின் மெல்லிய அசைவுகள் அதன் உயிர்த்தன்மையை பற்றியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் பண்பாடு உயிருள்ள செயல். பண்பாடு உயிருள்ள படிவு. அப்படியெனில் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? பண்பாடு பழமையானது. பழமையாகிக் கொண்டு சேகரமாகுபவை பண்பாடு ஆகின்றது. நாகரிகம் என்பது பண்பாட்டின் புதுமையான அம்சங்கள். சேலை கட்டுவது ஒரு பண்பாடு என்றால் கால மாற்றங்களில் வரும் புதுவிதமான சேலைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாக அமைகின்றன.

இன்றைக்கு ஈழத் தமிழினம், மாபெரும் பண்பாடு இழப்பை சந்தித்து வருகின்றது. ஈழத்தை பொறுத்தவரையில் எல்லாமே சேதங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகின்றன. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தின் ஆடைகள், சமயங்கள், வழிபாடுகள், மரணச்சடங்குகள் என்று பண்பாட்டின் அதத்தனை அம்சங்களும் ஒடுக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் தான் தமிழர்களின் தனிப் பெரும் திருநாளான தைப் பொங்கலை அணுக வேண்டியிருக்கிறது.

உண்மையில் தைப்பொங்கல் என்பது எதன் வெளிப்பாடாக இருக்கிறது? தமிழர்கள் மத்தியில் இருக்கும் அற்புதமான பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற நிகழ்வுகளில் ஒன்றுதான் பொங்கல். தைப்பொங்கல், இயற்கை வழிபாட்டையும், மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகிற பண்டிகை. வெறுமனே வர்ணமயமாக கொண்டாடப்படும் பண்டிகைகளின் மத்தியில் இயற்கையை வழிபடுகின்ற, சூரியனை வழிபடுகின்ற சிறப்புமிக்க பண்பை தைப்பொங்கல் கற்பிக்கிறது.

இயற்கை இல்லையெனில் நாம் இல்லை. பூமியின் உயிர்வாழ்வுக்கு சூரியனை வழிபடுகிற செயல் மிக முக்கியமானது. நம்முடைய வாழ்வு சூரிய ஒளியில்தான் தங்கியிருக்கிறது. நம்முடைய விவசாயம், நமது உணவு என்று யாவும் சூரியனை சுற்றியிருக்கிறது. சூரியனை வழிபடுகின்ற பண்பு என்பது இப் பூமியை மாத்திரமின்றி அத்தனை கோல்களையும் வழிபடுகின்ற பண்பின் முந்தைய வடிவம் எனலாம். அது கற்றுக்கொடுக்கின்ற ஒழுக்கம் என்பது மனித வாழ்வுக்கு அடிப்டை.

இயற்றை பேண்நிலைக்கும் அதுவே அடிப்படை. தைப் பொங்கல், பகிர்ந்துண்ணலை வலியுறுத்துகிறது. இந்த உலகில் மனிதாபிமானத்தை வலியுறுத்துகிற பண்டிகை என்றும் தைப்பொங்கலைப் பார்க்கலாம். அது மாத்திரமின்றி தைப்பொங்கலுக்கு மறுநாள் வருகின்ற மாட்டுப் பொங்கல், இப் பூமியில் உள்ள பசுக்கள் முதலிய பிராணிகள்மீது எப்படிக் கருணை காட்ட வேண்டும் என்ற பேரன்பை புலப்படுத்துகிறது. விலங்குகளை தெய்வங்கள் போல வழிபடுகிற மரபும் நம்மிடம்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட தமிழினத்தின் பண்பாடு இன்று எத்தகைய ஆபத்திலும் துயரத்திலும் இருக்கிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இம்முறை தைப்பொங்கல் பரிசாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டுள்ளது. அண்மைய தினங்களில் குறித்த தூபி அழிப்பு, தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. தமிழர்களை மாத்திரமல்ல, முஸ்லீம்களையும் மனிதாபிமானமுள்ள சிங்களவர்களும் கவலையுற்றனர். பண்பாடு உயிருள்ள அசைவு என்பதை நினைவுத் தூபிக்கு எதிரான எழுச்சி நமக்கு பெரும் அர்தத்தைப் புலப்படுத்துகிறது.

போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கொள்வதும் அவர்களுக்காக நினைவுச் சின்னங்களை  எழுப்புவதும் பண்பாடு. உலகின் பல இனங்களுக்கும் பல்வேறு வகையிலும் இப் பண்பாடு இருக்கிறது.  தமிழர் மரபில் இந்தப் பழக்கம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் கற்களை எழுப்பி நடுகல் வழிபாடு செய்கின்ற மரபு தமிழர்களுக்குரியது. நடுகல் பண்பாடும் கோயில் பண்பாடும் தமிழர்களின் தனித்துவம். அவ் வழி வந்த பண்பாடு இன்றைக்கு பல்வேறு வகையிலும் பல்வேறு வழியிலும் சிதைக்கப்படுகிறது.

இறந்தவர்களுக்கு எழுப்பும் நினைவிடங்கள், இறந்தவர்கள் பற்றியதுதான். அவைகள் அரசியல் வாதங்களல்ல. அவைகள் கண்ணீரோடும் இழப்போடும் தொடர்புடைய ஆறுதலிடங்கள். அவற்றின்மீது ஆயுதங்களை பிரயோகித்து, அவற்றை சிதைப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அப்படிச் செய்தால் அது பண்பாட்டுக்கு மாறானது. அது வன்முறையானது. மனித மாண்புகளுக்கும் மக்களின் எளிய நம்பிக்கைகளுக்கும் எதிரான கடும் ஆயுதம், அல்லது போர்.  

வடக்கு கிழக்கில் சமீபகாலமாகவே நினைவு கூரும் பண்பாடு ஆபத்தில் சிக்கியிருக்கிறது. பண்பாட்டுக்கு மாறான புரிதல்களும் அடக்குமுறை எண்ணங்களும் இனவாதத்தை நோக்காக கொண்டவர்களின் அணுகுமுறையாகவும் இது இருக்கிறது. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்பது தான் தமிழ் மரபில் இருக்கும் அணுகுமுறை. வடக்கு கிழக்கின் தெருக்களிலிருந்து சமூக வலைத்தளங்கள், இணையங்கள் வரை இந்த பண்பாடற்ற முறை பரவி விரிந்து கொண்டிருக்கிறது.

பண்பாட்டின் தலை சிறந்த நாளெனக் கருதப்படும் தைப்பொங்கல் நிகழ்வில், மனித மாண்புகள் நிலை கொள்ளுகிற காலம் ஒன்று வர வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதுதான் இப்போதுள்ள எளிய வழி. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகை ஊடறுத்திருக்கும் இச் சமயங்களிலும்கூட – இயற்கையின் கேடுகளை மனித இனத்தின் கேடுகள் விஞ்சுகின்ற காலத்தில் – மனிதாபிமானத்தையும் இயற்கையின் மாண்பையும் கொண்டாடுகின்ற தைத் திருநாள், இப் பூமியின் அனைத்து உயிர்களுக்கும் பாடறிந்து ஒழுகும் பண்பாட்டை போதிக்குமென நம்புவோம்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்